நாகர்கோவில், மே 13
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று காலை 3 வது வார்டு மற்றும் 19வது வார்டு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது 3வது வார்டு பகுதியில் ஏற்கனவே குடிநீர் பிரச்சினை உள்ளதாக அந்த வார்டு கவுன்சிலர் அருள் சபிதா ரெக்சிலிங் மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் ஆய்வு செய்த போது, ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் வேகம் குறைந்து வருவதால் கடைநிலைப் பகுதி வரை குடிநீர் சப்ளை இல்லை என அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருந்து குடிநீர் டேங்க் அமைத்து தண்ணீர் சப்ளை ஏற்பாடு நடந்தது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை என்றனர்.
இதை அடுத்து மேல ஆசாரிப்பள்ளம் பகுதியிலும் மேயர் மகேஷ் ஆய்வு செய்து, தண்ணீர் சப்ளை சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் கோணத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பொது அறிவு அறிவியல் சம்பந்தமாக ரூ. 7 லட்சத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றை எந்த பகுதியில் வைத்து நூலகம் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகரில் அனைத்து வார்டுகளுக்கும் பாகுபாடு இன்றி தண்ணீர் விநியோகம் நடக்கிறது.
கோடையில் சில சமயங்களில் தண்ணீர் வேகம் குறைவாக இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை இல்லை என்றார். இந்த ஆய்வின் போது ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர் அருள் சபிதா, உதவி பொறியாளர் ரகுராஜன், மாநகராட்சி அலுவலர்கள் தேவி, பகவதி பெருமாள், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.