போகலூர், ஜன.27-
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் வைரவனேந்தல் ஊராட்சியில் குடியரசு தின விழா சிறப்பு கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்திதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்திதா பேசுகையில்;
குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டம் இது. இதுபோல் முக்கிய காலங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் ஒன்று கூடி ஊராட்சியின் வளர்ச்சிக்கும் தனி மனிதன் பொருளாதார மேம்பாட்டிற்கும் தேவையான திட்டங்களை நிறைவேற்றிடும் வகையில் கிராம சபை கூட்டம் மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது. அத்தகைய கிராம சபை கூட்டத்தில் மக்கள் அனைவரும் முழுமையாக கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை பராமரித்திட கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நடத்தும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெற்றிட வேண்டும். குடிநீர் திட்டத்திற்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தங்களின் தேவைகளை இது போன்ற கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு கோரிக்கை வைத்து பயன்படுத்திக் கொள்ள அரசு வழங்கும் நல்ல வாய்ப்பாகும்.
இவ்வாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மக்கள் மத்தியில் பேசினார்.
ஊராட்சி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
கிராம மக்கள் மற்றும் மகளிர் குழுவினர் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.