நாகர்கோவில் அக் 18
குமரி மாவட்டத்திலிருந்து நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட சுவாமி சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு புதன்கிழமை வந்து சோ்ந்தன. இங்கு வைத்து சுவாமி சிலைகளுக்கு கேரள போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.
திருவிதாங்கூா் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னா், நவராத்திரி விழாவுக்காக ஆண்டுதோறும் பத்மநாபபுரத்தில் இருந்து சரஸ்வதி அம்மன்,
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி
ஆகிய சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்படும். நவராத்திரி விழா நிறைவு பெற்ற பின்னா் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும். மன்னா் ஆட்சி காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நிகழாண்டு நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் பல்லக்கிலும் பத்மநாபபுரத்தில் இருந்து கடந்த அக். 1-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நவராத்திரி விழா நிறைவுபெற்றதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து சுவாமி சிலைகள் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
நெய்யாற்றின்கரை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் இரவு தங்கலுக்குப் பின்னா், புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு சுவாமி சிலைகள் வந்தடைந்தன. பின்னா் சுவாமி ஊா்வல பொறுப்பை கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை கண்காணிப்பாளா் சிவகுமாா் மற்றும் அதிகாரிகளிடம் கேரள காவல்துறையினா் ஒப்படைத்தனா். மேலும் சுவாமி சிலைகளுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.
குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இரவு தங்கலுக்குப் பின் சுவாமி சிலைகள் பத்மநாபபுரம் சென்று, அங்கிருந்து முன்னுதித்த அம்மன் சிலை சுசீந்திரம் கோயிலுக்கும், குமாரசுவாமி சிலை வேளிமலை கோயிலுக்கும் கொண்டு செல்லப்படும்.