நாகர்கோவில் ஜூன் 30
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த புதன்கிழமை முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த புதன்கிழமை மாலை முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி மேல் தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி மேல் தண்ணீரும் தற்போது உபரிநீராக திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறு மற்றும் பரளியாறு போன்ற ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக எனவே இந்த ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி விருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு வார விடுமுறை நாளான நேற்று ( சனிக்கிழமை)சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதோடு திருப்பரப்பு அருவியில் அழகை தூரத்தில் நின்று மட்டுமே கண்டு செல்கின்றனர்.