அரியலூர், நவ;14
தமிழ்நாடு முதலமைச்சர்
15.11.2024 நாளை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில்
சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும், வாரணவாசி ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்தும் மற்றும் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதியத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற
திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்
அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அரசுத் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 14.11.2024 இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வருகை தர உள்ளார். அதனைத்தொடர்ந்து, 15.11.2024 நாளை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் ஜெயங்கொண்டம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையினை சுமார் 130 ஏக்கரில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி அவர்களை சராசரி ஊட்டச்சத்து நிறையுடையவர்களாக உருவாக்கி தமிழ்நாட்டினை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக மாற்றும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” எனும் உன்னதமான திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்க உள்ளார்கள். இத்திட்டத்தின் வாயிலாக 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0-6 மாதங்களுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படவுள்ளது.
பின்னர், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 26 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் தமிழ்நாடு முதலமைச்சர் விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்