தக்கலை, ஜன. 9 –
மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (36). கார் டிரைவர். இவர் சில தினங்களுக்கு முன்பு சொந்தமாக சரக்கு ஆட்டோ வாங்கினார். அந்த ஆட்டோவை பதிவு செய்வதற்காக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இன்று கொண்டு சென்றார். அங்கு வாகன பதிவு ஆய்வு முடித்த பின்பு, அதே ஆட்டோவில் கூண்டு கட்டுவதற்காக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
தக்கலை பகுதியில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் உள்ள வள்ளியற்றில் பாய்ந்தது. இதில் ஆட்டோவில் சிக்கி இம்மானுவேல் படுகாயம் அடைந்தார். அப்பகுதியினர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரம் தக்கலையில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை பார்வையிடுவதற்காக கலெக்டர் அழகுமீனா காரில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார்.
பொதுமக்கள் குவிந்து நிற்பதை கண்ட அவர் உடனடியாக நிறுத்தி இறங்கி விசாரித்தார். உடனடி பொதுமக்கள் உதவியுடன் இம்மானுவேலை மீட்டு, அவரை தனது காரில் ஏற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றார். அங்கு டாக்டர்களிடம் விரைந்து சிகிட்சையளிக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் அவர் மருத்துவ முகாமில் சென்றார். கலெக்டரின் இந்த மனிதநேய செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள். தற்போது கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு குவிந்து வருகிறது.



