திருவண்ணாமலை நவ. 19 –
திருவண்ணாமலையில் பிரசித்த பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 24ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் நிறைவாக டிசம்பர் 3ந்தேதி மகாதீபபெருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணிதீபமும் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழாவில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆட்சியர் க. தர்ப்பகராஜ், அறநிலையத்துறை செயலாளர் மணிவாசகம், ஆணையாளர் ஸ்ரீதர், சி.என். அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி. சரவணன், டிஐஜி தருமராஜ், எஸ்.பி. சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படும்.
கடந்த ஆண்டு மலைச்சரிவு ஏற்பட்டதால் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் தீபத்தை பாரம்பரியப்படி ஏற்ற வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். அதன்படி எவ்வித பாதிப்புமின்றி அனைவரும் பாராட்டும்படி விழாவை நடத்தினோம்.
அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த தீபத்திருவிழா பக்தர்களின் மனம் குளிரும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என்றார்.



