நாகர்கோவில் ஏப் 16
குமரி மாவட்டதில் காவல் கண்காணிப்பாளராக மரு. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்கள் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்க மக்கள் நல நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுவிளை கிராமத்தில் 12-04-25 -ல் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தை (ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி) தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் பயனாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரநாராயண மங்கலத்தில் இரவு நேரங்களில் ஆடு மற்றும் மாடுகள் திருடப்படுவது குறித்து இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட காவலருக்கு பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் ஆட்டினை பறிகொடுத்த நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசாரின் விரைவான நடவடிக்கையில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட அனந்த பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பிரகாஷ் (29) என்பவரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஆறு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் பெரும் வெற்றி அடைந்து வருகிறது. இத்திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குற்றங்கள் வெகுவாக குறைந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தத் திட்டம் சிறப்புடன் செயல்பட காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.