புதுக்கடை, பிப்- 24
புதுக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மழையில் நனைந்தபடி மனநலம் குன்றிய நிலையில் முதியவரை போன்ற தோற்றத்துடன் நபர் ஒருவர் காணப்பட்டார். அவரால் எழும்ப முடியாமல் நலிவுற்று காணப்பட்டதால், தேங்காப்பட்டணம் துறைமுக மேற்பார்வையாளர் கொடுத்த தகவலின் பேரில் பேரிடர் மீட்பு குழு தாலுகா ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான ராஜ ஸ்டீபன் தலைமையில் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்கள் அவரை மீட்டனர். பின்னர் அவருக்கு முதல் உதவி செய்து புதுக்கடை காவல்துறையின் அனுமதி பெற்று முதியோர் இல்லத்தில் கடந்த 20/5/2024 அன்று சேர்த்தனர்.
தற்போது அந்த நபருக்கு உடல் நிலையும் மனநிலையும் சீரானதால் அவராகவே பெற்றோரிடம் அனுப்பி வையுங்கள் என்று காப்பக உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவருடைய முகவரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்குத் தெரு, குரோம்பட்டி ஊரை சார்ந்த மணி, முனியம்மாள் மகன் முனியாண்டீஸ்வரன் (30) என்று தெரிய வந்தது.
உடனடியாக முனியாண்டீஸ்வரன் பெற்றோரை புதுக்கடை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோரிடம் நேற்று அவரை ஒப்படைத்தனர். சுமார் 12 மாதமாக காணாமல் போன தன் மகனை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் முனியாண்டீஸ்வரன் தாயார் கூறுகையில், – மகனை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்களுக்கும் ஒன்பது மாதமாக பராமரித்த காப்பக நிர்வாகிகளுக்கும், மிக வேகமாக முகவரி கண்டுபிடித்து மகனை எங்களுடனே ஒப்படைத்த காவல்துறையினருக்கும் நன்றிகளை மனதார தெரிவித்துக் கொள்வதாக கூறினார். போலீசார் வாழ்த்தி முனியாண்டீஸ்வரனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.