கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தது என்றும், குறிப்பாக மாணவர்கள், பெண்கள், தொழில் அதிபர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய கொண்டு வந்த திட்டங்களால் மற்ற நாடுகளை விட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது எனவும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்து செயல்படுத்தபடுவதுடன், அனைத்து வகைகளிலும் ஊழல் செய்து திட்டத்தை நீர்த்து போக செய்கிறது என்ன குற்றம் சாட்டினார். மேலும், செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடுகிறார். குறிப்பாக ஓசூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க படும் என்று அறிவிக்கிறார். மத்திய அரசின் உத்தரவுபடி பெங்களூரு சர்வதேச விமான நிலையம் இருக்கும் போது , 150 கிலோ மீட்டர் சுற்றளவில் மற்றொரு விமான நிலையம் அமைக்க முடியாது. இது போன்ற அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகும். கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்த அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மாவட்ட ஆட்சியர் மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் போன்றவை செய்த முதல்வர், விற்பனை செய்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, இதனால் மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி நிலவுவதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்து மக்களின் மனம் புண்படும் வகையில் உரையாற்றுகிறார். இது போன்ற பேச்சு மக்களை பிளவு படுத்தும் செயலாகும். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த திட்டங்களால் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் செல்வதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், இதை பொறுத்துக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி, பிரதமர் மீது குறைகளை கூறுகிறது. தமிழகத்தில் கஞ்சா, மது விற்பனை, கொலை, கொள்ளை நடந்தாலும் திமுக கூட்டணியில் உள்ள நடு நிலை கட்சிகள் கேள்வி கேட்பது இல்லை என்று குறை கூறினார்.நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சி.நரசிம்மன், மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட பார்வையாளர் முனிராஜ், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசு, ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் எம்.ஆர்.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் சங்கர், மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசு, மாவட்ட துணைத் தலைவி ஜெயலட்சுமி, நகராட்சி கவுன்சிலர் சங்கர், கார்த்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.