தஞ்சாவூர், நவம்பர் 18 –
தஞ்சாவூரில் மேக தாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை, எரித்து காவேரி உரிமை மீட்பு குழு வினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணைக்கட்ட விட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் மேகத்தாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு குடிநீர் வராது. எனவே இந்த உத்தரவை கண்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தது.
அதன்படி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட் டத்திற்கு பொருளாளர் மணிமொழி யன் தலைமை தாங்கினார். தமிழக விவசாய சங்க மண்டல ஒருங்கி ணைப்பாளர் ஜெகதீசன், காவிரி உரிமை மீட்பு குழு மண்டல ஒருங்கி ணைப்பாளர் வைகறை, நிர்வாகிகள் பழ.ராஜேந்திரன், துரை ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் ஓடி வந்து தண்ணீர் மட்டும் தீயணைப்பான் கருவி மூலம் அனணத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் சாமி. கரிகாலன், செந்தில்வேலன், விடுதலை சுடர், ராமசாமி, தமிழர் தேசிய களம் கலைச்செல்வன், வணிகர் சங்க பேரவை நகர செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் தபால் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிறுவியது.



