தென்காசி, நவம்பர் 21 –
தென்காசி மாவட்டத்தில் திமுக சார்பில் கடந்த 11-ஆம் தேதி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கூறிய கருத்துக்களை அரசியல் புரிதலின்றி திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 18-ஆம் தேதி சுரண்டை அண்ணாசிலை அருகில் பெருமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக திமுக மாவட்ட செயலாளரின் உருவப் படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும், அவதூறு வார்த்தைகளால் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் அலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கும் தோணியிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் பேசி பதிவிட்டு வரும் பாஜக நிர்வாகிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



