சங்கரன்கோவில். ஜூலை.3.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும் .சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஜூலை 21ஆம் தேதி ஆடித்தபசு திருவிழாவும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கும்பாபிஷேக விழாவும் நடக்கிறது. பொதுவாக சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு காலங்களில் மட்டும் கோயில் கோபுரத்திற்கு ஒளியூட்டும் விளக்குகள் பொருத்தப்படும் . அந்த நேரத்தில் எத்தனை தொலைவில் இருந்து பார்த்தாலும் சங்கரன்கோவில் கோயிலின் தோற்றம் கண்கொள்ளா காட்சியாக அமையும். ஆடித்தபசு காலங்களில் மட்டுமே பக்தர்கள் ஒளிரும் விளக்குகளுடன் கோபுரத்தை தரிசனம் செய்து வந்தனர்.
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், மற்றும் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,திருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவில்லிபுத்தூர், அருள்மிகு நாச்சியார் திருக்கோயில்,
கும்பகோணம், அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் ஆகிய 5 கோயில்களுக்கு இரவில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும் என உத்தரவிட்டார். கோபுரம் மட்டுமல்லாமல் கோயிலின் விமானங்களுக்கும் நிரந்திரமாக ஒளியூட்டும் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது சங்கரன்கோவிலில் பக்தர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலுக்கு ஒளியூட்டும் விளக்குகள் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.



