ஈரோடு, ஜன. 13 –
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் கனகராஜ் கூறியதாவது: தமிழ்நாட்டில் மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது காலங்காலமாக தொடரும் வழக்கம். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மண்பாண்ட கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
தற்போது தமிழக அரசு பிளாஸ்டிக் தடை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் மண்பாண்டப் பொருட்களுக்கான வரவேற்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
சிறிய அளவிலான பானைகள் முதல் மிகப் பெரிய பானைகள் வரை பல்வேறு அளவுகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அழகிய வேலைப்பாடுகள் மற்றும் வண்ணங்கள் தீட்டப்பட்ட பானைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்தப் பானைகள் அவற்றின் அளவு மற்றும் வேலைப்பாடுகளைப் பொறுத்து ரூ. 100 முதல் ரூ. 1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது தமிழக அரசு ‘சமத்துவப் பொங்கல் 2026’ என அறிவித்துப் பண்டிகையை ஊக்கப்படுத்துவதால், பானை விற்பனை மேலும் சூடுபிடித்துள்ளது. மண்பானையின் மருத்துவப் பயன்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மண்பானை வெப்பத்தைச் சீராகப் பரவச் செய்வதால், அதில் சமைக்கப்படும் பொங்கல் அதிக சுவையுடனும், சத்துக்கள் குறையாமலும் இருக்கும். மண்ணின் காரத்தன்மை உணவின் அமிலத்தன்மையைசமன்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது.
மேலும், இவை முழுமையாக மண்ணோடு மண்ணாக மட்கிப் போகக்கூடியவை என்பதால், எவ்விதமான சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. மண்பாண்டங்களை பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு, நலிந்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்திப் பாரம்பரியத்தைக் காக்க முடியும்.
எனவே தமிழர்கள் பொங்கலை புது மண் பானையில் வைத்து மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



