நாகர்கோவில், டிசம்பர் 6 –
குமரி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதைப் பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் என மொத்தம் 72 வாகனங்களில், 48 வாகனங்கள் வரும் 22-12-2025ம் தேதி காலை 11 மணிக்கு மதுரையிலும், மற்ற 24 வாகனங்கள் 23-12-2025 அன்று காலை 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விடப்பட உள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் நாளை (7ம் தேதி) முதல் 21 ம் தேதி வரை திருச்சி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாகை, கோவை, சேலம், விழுப்புரம் ஆகிய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிடலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.1000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத் தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு, இரண்டு நாட்களுக்குள் அதற்கு உண்டான ஜிஎஸ்டி தொகையை அவர்களுடைய ஜிஎஸ்டி கணக்கில் செலுத்தி விட்டு அதன் நகலை சம்பந்தப்பட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் வாகனத்தின் விற்பனை ஆணை வழங்கப்படும். எலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


