அரியலூர், ஆக;22
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசுகையில், இந்தியாவில், பிற மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கிறது. இத்தகைய வளர்ச்சியினை மேலும் அதிகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாந்தோறும் ரூ.1000 அளித்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது மாணவர்களும் உயர் கல்வி பயிலுவதற்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அண்மையில் தொடக்கி வைத்தார்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தை தாண்டும் நிலை இருக்கும்.
கல்வியில் உயர்ந்து வருவதைப் போலவே விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தப்பட்டு வருகிறார்.
விளையாட்டு போட்டிகளில் உலக அளவிலும் மற்றும் தேசிய அளவிலும் வெற்றி பெறுபவர்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்காணித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.
எனவே கல்விக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் அது அடிப்படையாக இருக்கும் என்றார் அவர்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர் லெனின், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்