நீலகிரி. ஏப்ரல். 21.
ஊட்டி காந்தல் பகுதியில் அமைந்துள்ள’அறிவு சார் மையம் மற்றும் நூலகம்’ வளாகத்தில் சிறப்பு கோடைகால கணித முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுநல மருத்துவர் முகமது ஈஷா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையில் இந்த அறிவு சார் மையத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான பயிற்சி சிறப்பான முறையில் இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்களும் போட்டித் தேர்வாளர்களும் தமிழக அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘இனிக்கும் கணிதம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறிய கருத்துக்களாவன –
கணிதத்தை அறிவியலின் இளவரசி என்று கூறுவார்கள். கணிதம் இல்லாமல் எந்த அறிவியல் துறையும் செயல்படாது. இந்தியாவின் தலைசிறந்த கணித மேதை ராமானுஜம் அவர்கள் தன்னுடைய குறைந்த 34 ஆண்டு வாழ்நாளில் 3900 புதிய கணித சமன்பாடுகளை கண்டறிந்துள்ளார். அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் இன்றளவும் ஆராய்ச்சி பொருளாக அமைந்துள்ளது. அவர் கண்டுபிடித்த தீட்டா என்ற தேற்றம் இன்றைய நமது ‘ஏடிஎம்’ களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கணித மேதை சகுந்தலா தேவி தன்னுடைய பனிரெண்டாம் வயதில் இரண்டு 13 இலக்க எண்களை மனத்துக்குள் பெருக்கி 26 வினாடிகளில் விடை கூறி சாதனை படைத்துள்ளார். இன்றளவும் அது ஒரு உலக சாதனையாகவே திகழ்கிறது. அவர் வெறும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே பள்ளிக்குச் சென்று படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணித மேதை ஆலன் டூரிங் என்பவர் கண்டுபிடித்த கணித சமன்பாடு தான் இன்றைய அனைத்து கம்ப்யூட்டர்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. யூலர் என்ற கணித மேதை தனது மூன்று வயதில் ஒன்றிலிருந்து நூறு வரை கூடுதல் காணும் எளிய முறையை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெபிநோக்கி என்ற கணித அறிஞர் 0, 1,1,2,3,5,8….. என்ற கணித தொடரை கண்டறிந்தார். சூரியகாந்தி மற்றுமுள்ள பூக்களின் இதழ்கள் இந்த கணித தொடர் வரிசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் தொடரின் இரண்டு எண்களுக்கு இடையே உள்ள விகிதம் தங்க விகிதம் எனப்படும். நமது முகம் கூட தங்க வீதத்தில் அமைந்துள்ளது அதிசயமாகும் என்பன போன்ற பல சுவையான செய்திகள் மாணவர்களுக்கு கூறப்பட்டது.
மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள் மாணவர்களுக்கு பாடங்களை எளிதாக நினைவில் வைக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார். மெண்டல் அரித்மெடிக் எனப்படும் பேனா நோட் புக் இல்லாமல் மூன்று இலக்கம் வரையுள்ள எண்களை பெருக்கும் எளிய முறைகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். முன்னதாக நூலகர் திருமதி அசீனாபி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் போட்டித் தேர்வருக்கான ஆசிரியர் ராஜா வாழ்த்துரையும் நன்றியுரையும் கூறினார்.