ஊட்டி. ஜன.06.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், 34, என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கடும் குளிர் காரணமாக அடுப்பில் நெருப்பு மூட்டி உள்ளார்.ஊட்டியில் கடந்த இரு நாட்களாக உறைபனியால் கடும் குளிர் நிலவி வருகிறது. இச்சூழ்நிலையில் வீட்டில் இவருடைய மனைவி புவனா 28, மகள் தியாஸ்ரீ 4, மற்றும் உறவினர்கள் சாந்தா 59, ஈஸ்வரி, 57ஆகியோர் தங்கியிருந்தனர்.
மறுநாள் காலையில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளதை அருகில் உள்ளவர்கள் பார்த்து கதவை தட்டியுள்ளனர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து கதவை உடைத்துப் பார்த்ததில் வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் எமரால்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மயங்கி கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.