புளியங்குடி, நவம்பர் 15
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தி.நா.புதுக்குடி சூரிய நாராயணப்பேரி குளத்தின் கரைகளில் 1000 பனைவிதைகள் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் விதைக்கப்பட்டன. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், நீர் நிலைகள் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளக்கரைகளில் பனை விதைகள் விதைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள்.
அதன்படி புளியங்குடி அருகே தி.நா.புதுக்குடி சூரிய நாராயணப்பேரி குளத்தின் கரைகளில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் அமராவதி நர்சரி கல்லூரி, அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி, மருதம் பயிற்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம் வேளாண்மை துறை மாணவியர்கள் இணைந்து சுமார் 1000 பனை விதைகளை விதைத்தனர். முன்னதாக பனை விதையை விதைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, மாணவிகள் மத்தியில் பேசிய வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது இளைய தலைமுறையின் மிக முக்கியமான கடமையாகும். கல்வியை போலவே இயற்கையை பராமரிப்பதும் முக்கியமானதாகும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும். பனைவிதைகள் விதைத்ததன் மூலம் இந்த குளத்தின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும், என்றார்.
இந்த நிகழ்சியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளார் காருண்யா, அமராவதி நர்சிங் கல்லூரி தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள், அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி தலைவர் முருகன் அவர்கள், செயலாளர் ஜெய ஒளிவுஅவர்கள், முதல்வர் அந்தோணிராஜ் அவர்கள், புளியங்குடி சிஎஸ்சி மையம் மகேந்திரன் மற்றும் கல்லூரி மாணவிகள் 150 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷனைச் சேர்ந்த சேகர், கற்பகராஜ், ராமர், சங்கர், சண்முகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.