நாகர்கோவில் ஏப் 5
குமரி மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு தண்ணீர் காட்டும் எஸ் பி ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறு பரப்புவோருக்கு எஸ் பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தின தமிழ் நாளிதழின் சிறப்பு பார்வை உங்களுக்காக:-
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவி ஏற்றுக்கொண்ட மருத்துவர்.ஸ்டாலின் 2020-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானவர் ஆவார். காரைக்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், கோயம்புத்தூர் நகரம் (வடக்கு) துணை காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். குமரி மாவட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளில் அவர் தெரிவிக்கும் போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனது முதன்மை கவனம் செலுத்துவதாகவும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் இருவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தனது பணியை நேர்மையுடன் தொடங்கிய அவர் பொதுமக்கள் தவறு செய்தால் மட்டும் தண்டிக்க கூடியவர் இல்லை அதிகாரிகள் தவறு செய்தாலும் தவறுதான் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என தனது கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடியவர் என்பதை உணர்த்தும் வகையில் ஆரல்வாய்மொழி
சோதனை சாவடிக்கு திடீரென சென்றனர். இதனை பார்த்ததும் சோதனை சாவடியில் பணிபுரியும் 4 போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எஸ்பி ஸ்டாலின் சிறிதும் தாமதிக்காமல் கிடுகிடுவென சோதனை சாவடியில் உள்ள போலீசாரின் அறைக்கு சென்றார். அதைத்தொடர்ந்து கனிம வளம் ஏற்றி சென்ற வாகன ஓட்டுனர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ஒவ்வொன்றாக சோதித்து பார்த்தார். அப்போது சில ஆவணங்களுக்கு இடையே கொத்து கொத்தாக ரூபாய் நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.ஏது இவ்வளவு பணம்? என சோதனை சாவடி போலீசாரிடம் எஸ்பி ஸ்டாலின் கேட்டார். அதைத்தொடர்ந்து எஸ்பி, முறைகேடாக கனிம வளம் ஏற்றி வந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணம் தானே இது? என்று கேட்டு லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார். உடனே தவறு செய்த நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென கடிந்துகொண்ட எஸ்பி 4 போலீசாரையும் உடனே ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
எஸ்பி ஸ்டாலின் வருகைக்கு பின் குமரி மாவட்டத்தில் வழக்குகள் வேகம் எடுப்பதை குமரி மாவட்டத்தில் நடக்கும் விவகாரங்களை உற்று நோக்குபவர்கள் புரிந்திருப்பார்கள். இதில் முக்கியமான நிகழ்வுகளாக திருவட்டாரில் காணாமல் போன மாணவிகளை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்தது, நாகர்கோவிலில் மளிகை கடை ஊழியரை கொலை செய்த நபரை பிடித்தது, தக்கலைப் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவிகளை ஏமாற்றி பாலியல் பயங்கரத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது . சைபர் குற்றவாளிகளை டெல்லி சென்று கைது செய்தது. இளம் சிறார்கள் வாகனம் ஓட்டியதால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது. சில நாட்களுக்கு முன்பு அஞ்சு கிராமம் பகுதியில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் உடனடியாக கொள்ளையர்களை கைது செய்து நகையை மீட்டது, தொடர்ந்து புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது
போன்ற பல விஷயங்களில் எஸ்பி ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதே போல் இரவு 11 மணிக்கு பின் அதிரடி படையுடன் சாலையில் ரோந்து செல்கிறார், தேவை இல்லாமல் கூடும் கூட்டத்தை கலைந்து போக சொல்கிறார். இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும், இவரின் இத்தகைய நடவடிக்கையால் தேவைகளுக்கு வெளியில் வருபவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். மேலும் பொதுமக்கள் காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோத செயல்பாடுகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க whatsapp என்னை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் பொதுமக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்து தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணையும் அறிவித்திருந்தார். அதேபோல் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை குறித்து பொதுமக்கள் திருப்தியாக உள்ளார்களா என்பதை அறிந்து கொள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம் தொடங்கி வைத்து ஒளிவு மறை இன்றி பணியாற்றி வருகிறார்.
இவருடைய நேர்மையான பணியை பொறுத்துக் கொள்ள மனம் வராத நபர்கள், இவரின் நடவடிக்கையால் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட முடியாமல் முடங்கிப் போன சில சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் வேண்டுமென்றே அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று சில வதந்திகளை அவ்வப்போது பரப்பி வருகின்றனர்.
நேர்மையான அதிகாரிக்கு எதிராக எத்தனை விதமான பொய்யான தகவல்களை பரப்பினாலும் விக்ரமாதித்தனை போல தனது முயற்சியில் சிறிதும் மனம் தளராத மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் அமைதியாக வாழ தன்னுடைய பணியை இன்னும் சிறப்பாகவும் வேகமாகவும் செய்து வருகிறார்.
மாவட்ட எஸ்பி குறித்து தவறான தகவல்களையும் வதந்தியையும் பரப்பும் நோக்கில் ஈடுபட்டு வரும் நபர்களின் திட்டங்களை சல்லடையாக உடைத்து எரிந்து குமரி மாவட்டத்தில் சரித்திரம் படைக்க இருக்கும் பொது மக்களின் அன்புக்குரிய வேட்டையனின் வேட்டை தொடர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நல்லதை செய்ய நினைக்கும் எஸ் பி ஸ்டாலின் போன்ற நல்ல மனிதர்கள் எதை செய்தாலும் குற்றம் சாட்ட ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். நீதிக்கு மட்டுமே தலைவணங்கி பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க தன்னுடைய பணியை சிறப்பாக செய்துவரும் எஸ்பி ஸ்டாலினுக்கு தின தமிழ் சார்பில் சல்யூட்