வேலூர்=19
காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் வேந்தர் ஜி. விசுவநாதன் ரிவேரா கலை விழாவின் போஸ்டரை வெளியிட்டு இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது;
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இந்த ஆண்டு 23வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த விழா வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. கூடைப்பந்து அணி வீராங்கனை அனிதா பால்துரை தொடங்கி வைக்கிறார்.
இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு ஒரு பாடல் பாடுகிறார்.
நிறைவு விழாவில் இந்தி நடிகர் சோனு சூட் கலந்து கொள்கிறார். இந்த திருவிழா மாணவர்கள் மாணவர்களுக்காக நடத்தும் திருவிழாவாகும். இதில் ஒருங்கிணைப்பாளர்களாக 1300 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்த திருவிழாவில் 80 பல்கலைக்கழகங்கள், இந்தியா, மலேசியா நேபாளம், போர்ச்சுகல், தாய்லாந்து, ருமேனியா உள்பட 27 நாடுகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருவிழா இந்த ஆண்டு ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் நடைபெறுகிறது.
வருகிற 20 ஆம் தேதி பார்வையற்ற மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஐக்கியா என்ற பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த மாணவர்களின் கலை, கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அகம் என்ற நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்மோகன், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் பாட்டு போட்டி,, நடன போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, ஒருங்கிணைப்பாளர் கோகுல்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.