தென்தாமரைகுளம்,நவ.17-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை மக்களிடையே பரப்புவதற்காகவும் வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சமீபத்தில் முக்கியப் பங்காற்றிய இந்திய ராணுவத்தின் பழமையான பொறியாளர் குழுவில் ஒன்றான மெட்ராஸ் சாப்பர்ஸ், அதன் நினைவாக தனது வீரர்களுடன் இணையும் நோக்கத்துடன் எலக்ட்ரிக் பைக் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. மெட்ராஸ் சாப்பர்ஸின் 244 வது எழுச்சி நாள் மற்றும் கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நேற்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் வாகன பேரணி தொடங்கியது.
பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர். ராம்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற கேப்டன் குமாரதாஸ் தலைமை வகித்தார்.
பேரணியில் சுபேதார் வேடியப்பன் தலைமையில் பத்து ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.பேரணி கன்னியாகுமரி ஜீரோ பாய்ண்ட் வழியாக திருநெல்வேலி, மதுரை,திருச்சி,திருவண்ணாமலை, வேலூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் அல்சூர் பயிற்சி முகாமில் வருகிற 20 ம் தேதி நிறைவடைகிறது.
இந்தப் பேரணியின் நோக்கமே இ-பைக்குகளில் சவாரி செய்வது, அதனைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை மக்களிடையே பரப்புவதையும் பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது.