சங்கரன்கோவில். ஜூலை.14
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளரை நேரில் சந்தித்து சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா கோரிக்கை விடுத்தார்.
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோரிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீட்டிக்க வேண்டும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக மதுரை செல்லும் வகையில் தென்காசி ரயில் நிலையத்தில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்கு நீர் ஏற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசியை ரயில் முனயமாக மாற்ற வேண்டும், ராஜபாளையம் – சங்கரன்கோயில் இடையே கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும், நெல்லை மற்றும் செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க வேண்டும், நெல்லை – செங்கோட்டை இடையே ரயில்களின் வேகத்தை 110 கிமீ செல்லும் அளவிற்கு அதிகரித்து தென்காசி – செங்கோட்டை இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் சிறப்பு ரயிலை வாரம் இரு முறை இயங்கும் வகையில் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும், தென்காசி வழியாக பெங்களூரு மற்றும் மங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும், செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், தென்காசி வழியாக நெல்லை – கொல்லம் இடையே மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்திப்பின்போது ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா உடன் இருந்தார்.