கரூர், செப்.27-
காணியாளம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நிறைவு முகாம் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடவூர் அருகே உள்ள காணியாளம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் எம். எல்.ஏ.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார்.
முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டா, ஆதிதிராவிடர் இணையவழி பட்டா, நத்தம் பட்டா மாறுதல், இணையவழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 133 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 18 ஆயிரத்து 805 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மீ.தங்கவேல் வழங்கி பேசினார்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இல்லா நிலையை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. யாரேனும் போதைப்பொருட்களை விற்றால் பொதுமக்கள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் தகவல் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்கும் நபரின் ரகசியம் காக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.
முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றைப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர் இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கால்நடை பராமரிப்பு துறை சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் செழியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார் கடவூர் வட்டாட்சியர் இளம் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.