தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா சிட்டா பெயர் மாற்றம் புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்க வேண்டும் .என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் இளஞ்சிறார் நிதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று செயல்பட்டு வருகின்ற 18 குழந்தைகள் இல்லங்களில் தங்கி 2024 -2025 ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 62 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பொது தேர்வில் 483 என்ற அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் மற்றும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள் தெரிவித்து, பரிசுகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, தனித் துணை ஆட்சியர் சுப்பிரமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



