நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர்:பிப்:18 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பச்சூர்,கொண்டகிந்தனபள்ளி, கொத்தூர், பந்தாரபள்ளி என பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் அதன் சுற்றுவட்டார குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அவர்களின் விவசாய மற்றும் தொழில் தேவைகளுக்காக தங்கள் பகுதிகளிலிருந்து வாணியம்பாடி நகரம் வரை சென்றுவர 2 அல்லது 3 பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
மேலும் இக்கிராமங்களிலிருந்து வாணியம்பாடி நகரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் தங்கள் பகுதியிலிருந்து சுங்கச்சாவடி நெடுஞ்சாலை அல்லது நாட்றம்பள்ளிக்கு சென்று செல்ல வேண்டிய நிலமை உள்ளது.
இதற்கு 2 அல்லது 3 பேருந்துகள் மாறி தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுமார் 30,000க்கும மேற்பட்ட மக்கள் தொகை உள்ளடக்கிய கிராம ஊராட்சி பகுதியில் கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் அல்லது ஆம்பூர் நகரம் வரை
விவசாய மற்றும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கும் அரசு பேருந்துகள் இல்லாத நிலையில் அரசு பேருந்து இயக்கிட பொதுமக்கள் மத்தியில் பலத்த கோரிக்கை எழுந்த நிலையில்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் நாட்றம்பள்ளி ஒன்றிய கழக செயலாளருமான NKR சூரியகுமார் அவர்கள் கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட போக்குவரத்து கழக துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற கோரி உரிய துறை அலுவலருக்கு பச்சூர் ஊராட்சித் தலைவர் தியாகராஜன், கொத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முனிராஜ், கொண்டகிந்தனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, சொரக்கயல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி பூபாலன், நாட்றம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகேயன், காந்தி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய அமைப்பு செயலாளர் முருகன்,தேசிய முற்போக்கு திராவிட கழக ஊராட்சி செயலாளர் நந்திராஜன் என பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு பேருந்து இயக்கிட பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளனர்.
மேலும் பச்சூர் கிராம சமூக செயற்பாட்டாளர்கள் ரமேஷ்,முருகேசன், சரத்குமார்,பிரசாந்த் ஆகியோர் ஒன்றிணைந்து பொதுமக்களின் கோரிக்கையை முன்னெடுத்து அவர்களின் தொடர் முயற்சியால் அனைத்து கட்சி பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அரசு பேருந்து இயக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரையில் அரசு பேருந்து இயக்குவது தொடர்பாக நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களுடன் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.