சேலம், ஏப்.21:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையத்துடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வலிப்பு நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை, சேலம் உயர்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் இணைந்து செயல்படுத்தும் வலிப்பு நோய்க்கான மூளை அறுவை சிகிச்சை பிரிவு சார்பில் மருத்துவ கருத்தரங்கு, வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவை சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆா்.நடராஜன், முன்னாள் அமைச்சர் சரோஜா, எய்ம்ஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சரத் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் சேலம் நியூரோ பவுண்டேஷனில் இயங்கும் முன்னேறிய வலிப்பு மருத்துவ மையத்தின் தலைமை நரம்பியல் நிபுணர்கள் பிரிட்டீஷ் குமார், நிஷாமொல் ஆகியோர் கூறுகையில்,
மருந்துகளுக்கு பதிலளிக்காத வலிப்பு நோயாளிகளின் நோய்களுக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக உருவெடுத்து வருகிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன், வீடியோ ஈ.ஈ.ஜி. தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெக்ட் படம் எடுக்கும் முறைகள் போன்ற நவீன கருவிகள் மூலம் சுமார் 70 சதவீதம் நோயாளிகளின் மூளையில் உள்ள கட்டமைப்பு அல்லது நரம்பியல் சிக்கல்களை கண்டறிய முடிகிறது.
சேலத்தில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலம் 2 மையங்களும் அறிவு பரிமாற்றம், பயிற்சி மற்றும் கூட்டு வழக்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு வலிப்பு சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகும். மேலும் நியூரோ பவுண்டேஷனில் பணியாற்றும் இளம் நரம்பியல் நிபுணர்கள், நர்சு மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி தொழில்நுட்ப நிபுணர்களுக்கு எய்ம்ஸில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் முதன் முறையாக மற்றொரு மருத்துவமனையில் இணையும் முயற்சியாகும் என தெரிவித்தனர்.
இதில், நரம்பியல் துறை தலைவர் மஞ்சரி திரிபாதி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மை தலைவர் லோகநாயகி, குழந்தைகள் நல டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.