டெல்லி, டிசம்பர் 11 –
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் இன்று மக்களவையில் குமரி மற்றும் தென் மாவட்டத்தின் மீனவர் சமூகங்கள் எதிர்கொள்கிற அவசர பிரச்சினைகளை முன்வைத்து, உடனடியாக அரசு தலையிட வேண்டும் கேட்டுக்கொண்டார்.
இன்று பாராளுமன்றத்தில் பேசிய அவர் இந்த கோரிக்கைகளை மாண்புமிகு மத்திய மீன்வள துறை அமைச்சர் அவர்களுக்கும் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தார்.
மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் தூரக்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும்பொழுது அவசர தகவல் அனுப்புதல், காலநிலை எச்சரிக்கை பெறுதல் போன்ற இருவழி தொடர்பு முறை மிக அவசியமாகிறது. எனவே ஆழ்கடல் செயல்பாடுகளில் பயன்படுத்தக்கூடிய, தடையற்ற, நம்பகமான, குறைந்த செலவு மற்றும் நடைமுறைக்கு ஏற்ற இருவழி தொடர்பு கருவிகளை விரைவில் அமைச்சகம் ஏற்படுத்தி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மீன்பிடி கப்பல்களுக்கு கட்டாய தொழில்நுட்ப தரநிலைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை செயல்படுத்துவதற்கான உதவித்தொகை வழங்கும் கடன் திட்டம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரும் பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான உதவித்தொகை ஆகியவற்றையும் அரசு அறிவிக்க வேண்டுகிறோம் என கேட்டு கொள்கிறேன்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 என்பது நிலச் சூழல் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டதாகும்; அது கடல் சூழலுக்கு பொருத்தமில்லாததாக உள்ளது. சில கடல் உயிரினங்களை, போதிய அறிவியல் ஆய்வு அல்லது மீனவர்களின் ஆலோசனை இன்றி ஒருதலைப்பட்சமாக இந்த சட்டத்தின் கீழ் பட்டியலிட்டது, கடல்சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் கடலில் நீரில் மூழ்கி இருக்கும் நிலையில் உள்ள உயிரினங்களை உறுதி செய்து அடையாளம் காண்பது பல சமயங்களில் சாத்தியமில்லை.
எனவே கடல்சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தனித்த ‘கடல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தை’ அமைச்சகம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடல் உயிரினங்கள் ஆபத்தான அல்லது அழிவுறும் நிலை என அறிவிக்கப்பட்டால், அதன் நிலை மீண்டும் ஆய்வு செய்யபட்டாமல் உள்ளது. இது பல நேரங்களில் இனப்பெருக்க வளர்ச்சியை கணக்கில் கொள்ளாததால் தவறான தகவலை அளிக்கிறது . எனவே தேசிய பாதுகாப்பு சட்டக்கட்டமைப்பில், கடல் உயிரினங்களின் பாதுகாப்பு நிலையை வெளிப்படையான, அறிவியல் அடிப்படையிலான மறுஆய்வு செய்யும் கட்டாய பிரிவை சேர்க்கும்படி அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
2004 சுனாமிக்குப் பின்னர் கடற்கரையோர கரைச்சரிவு தீவிரமடைந்து, பல குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்துள்ளனர். மேலும், கடல்சரிவு தடுப்பு சுவர் அமைக்கபட்டிருப்பது பாரம்பரிய கரை மீன்பிடித்தலை பாதித்தால் மீனவர்களுக்கு வாழ்வாதார இழப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆதலால் சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்தி நீண்டகால கடற்கரை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும், சமூகத்துக்குள்ளேயே பாதுகாப்பான மற்றும் பேரிடர் பொறுத்தமான வீடமைப்பு ஏற்படுத்தவும், அதனுடன் தனிப்பயன் பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்புகளையும் ஒருங்கிணைக்கவும் அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
WTO-வில் நடைபெற்று வரும் மீன்வள உதவித்தொகை கட்டுப்பாட்டு முயற்சிகள், பெரும்பாலும் சிறு மற்றும் பாரம்பரிய முறையில் மீன்பிடி செய்யும் இந்திய மீனவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. எரிபொருள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்கான அரசின் குறைந்தளவு உதவித்தொகையை அவர்கள் முழுமையாக நம்பியிருக்கின்றனர். ஆகவே இந்தியா அரசு WTO பேச்சுவார்த்தைகளில் சிறு மீனவர்களின் வளர்ச்சியை வலுவாக முன்வைக்கவும், வளர்ந்து வரும் நாடுகளுக்கான சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறை (SDT) பெற வலியுறுத்தவும், உதவித்தொகை கட்டுப்பாடுகள் வாழ்வாதாரத்தையும் உணவு பாதுகாப்பையும் பாதிக்காத வகையில் உறுதி செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.
கடல் விஞ்ஞானிகள், சமூக பொருளாதார வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள், கடலோர மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட குழு ஒன்றினை அரசு அமைத்து மீனவர்களின் அன்றாட பிரச்சனைகள், தற்பொழுதுள்ள கடலாண்மை சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மேம்படுத்தி விஞ்ஞானபூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மீனவர்களின் மேம்பாட்டிற்காக தொலைநோக்கு பார்வையுடன் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த அரசு ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



