நாகர்கோவில் – செப்- 24,
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க முயற்சி ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டு நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் தலைமையில் மாநில துணைச் செயலாளர் பிஜிரூல் ஹபீஸ் மற்றும் பிற அமைப்பினை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை முறை அளித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.
இத்திட்டம் அமையவிருக்கும் இடம் இயற்கையாகவே அதிக கதிரியக்கதன்மையுடைய பகுதிகளாகும். இந்த நிலையில் அணுக் கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அணுக்கதிரியிக்க பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.
ஏற்கனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி,ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கூத்தன்குழி, மனவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம்பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும். இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயர கூடும்.
இதனைக் கவனத்தில் கொள்ளாமல், தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் தாது மணல் உள்ளிட்ட அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும். அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும்போது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் மக்களின் எதிர்ப்பை மீறி, அணுக் கனிம சுரங்கங்களை திறக்க முற்பட்டதால், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் போராட்டத்தை, மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் என்று அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் மனித நேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் முஜிப் ரஹ்மான், மாநில துணை செயலாளர் பிஜிரூல் ஹபீஸ், பிற அமைப்பினை சார்ந்த சுப . உதயகுமார், வழக்கறிஞர் ஐய்யப்பன், குமரி ரசூல், ரவி, மாரிமுத்து, சியாமளா, பெரஸ்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



