நாகர்கோவில், நவ. 27 –
நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மார்ச் மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
விசாரணையில் சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அந்த பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.
தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தடைப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி சுமேஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சுமேஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தொழிலாளி கொலை வழக்கில் 8 மாதங்களுக்கு பிறகு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தீவிரமாக குற்றவாளியை தேடி கண்டுபிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் வெகுவாக பாரட்டினார்.



