நாகர்கோவில், ஜன. 3 –
நாகர்கோவில் எம் எஸ் ரோட்டில் ரோமன் கத்தோலிக்க சபை பரவர் பிரிவிற்கான கல்லறை தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கல்லறையில் நுழைவாயிலில் புனிதமிக்கேல் அதிதூதர் சொரூபத்துடன் குருசடி உள்ளது. இன்று காலை காவலாளி அந்த பகுதியில் வந்த போது குருசடி கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சொரூபமும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதை கண்ட காவலாளி ஊர் கமிட்டி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
நிர்வாகிகள் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் சம்பவத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கல்லறை தோட்டம் நாகர்கோவில் – வடசேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. 24 மணி நேரம் வாகன போக்குவரத்து உள்ள பகுதியாகும். இந்த நிலையில் சொரூபத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த குருசடியை உடைக்கப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் உடைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பின்பு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.



