இராமநாதபுரம் செப் 26-
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட முதுகுளத்தூர் ஆத்துபாலத்திற்கு இணையாக கட்டப்படும் புதிய பாலத்தினை இராமநாதபுரம் கோட்டப்பொறியாளர் ஜி.முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் சாயல்குடி சாலை முதுகுளத்தூர்(நெ) க(ம)ப உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையாகும். தஞ்சாவூர் – சாயல்குடி சாலை கி.மீ 226/4 -ல் 70 வருடம் பழமையான குறுகிய பாலம் (முதுகுளத்தூர் ஆத்துபாலம்) உள்ளது. பாலம் குறுகிய நிலையில் உள்ளதால் இரு வாகனங்கள் நேர் எதிரே கடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அவசர ஊர்தி மற்றும் தீயணைப்பு வாகனங்களும் செல்ல கால தாமதம் ஆகிறது. இதனை சரிசெய்யும் விதமாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24-ன் கீழ் தஞ்சாவூர் – சாயல்குடி சாலை கி.மீ 226/4 -ல் மேலும் ஒரு புதிய பாலம் ரூ 3.85 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்து நெடுஞ்சாலைத்துறை மூலம் பணி நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூர் நகருக்கு செல்லக்கூடிய முக்கிய குடிநீர் குழாய் (700 மி.மீ. MS) மாற்றி அமைத்துவிட்டு வேலை ஆரம்பிக்க வேண்டிய சூழல் இருந்தது. மக்களவை தேர்தல் 2024 காரணமாக உடனடியாக குடிநீர் குழாய் மாற்றியமைக்க முடியவில்லை. தேர்தல் முடிவிற்கு பின்னர் மேற்கண்ட குடிநீர் கொண்டு செல்லும் குழாய் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாற்றப்பட்டு ஜூன் 2024 இறுதியில் தான் வேலைத்தளம் ஒப்பந்தகாரரிடம் ஒப்படைக்கப்பட்டு, பால வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலத்திற்கு முன் விரைவாக பணியை முடித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேலையை மேலும் துரித படுத்துமாறு இராமநாதபுரம் கோட்டப்பொறியாளர்
அவர்களால் ஒப்பந்தகாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆய்வின்போது இராமநாதபுரம் தரக்கட்டுபாடு ரெங்கபாண்டியன், முதுகுளத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் உதவிக்கோட்டப்பொறியாளர் இரா.நவநீத கிருஷ்ணன் மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர்.