மதுரை நெல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இறைச்சி கடைகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதிகளவிற்கான விற்பனை நடைபெற்ற நிலையில் அங்குள்ள இறைச்சி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட இறைச்சி கழிவுகள் முழுவதுமாக வைகையாற்று கரையோர சாலையில் மலை போல குவித்து வைக்கப்பட்டது. இதனால் கரையோர சாலையில் முழுவதிலும் கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் நடமாடக்கூட முடியாத பகுதியாக மாறியது. மதுரை மாநகராட்சி வைகை தென்கரை சாலை பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டியதாக புகார் வந்ததன் அடிப்படையில் நெல்பேட்டை பகுதிகளில் இறைச்சி கழிவுகளை சாலையோரத்தில் கொட்டப்பட்ட பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உத்தரவின்படி பொக்லைன் இயந்திர மூலமாக இறைச்சி கழிவுகள்
அகற்றப்பட்டது. பின்னர் ப்ளீச்சிங் பவுடர்களை தெளித்து நடவடிக்கை மேற்கொண்டார். இதனையடுத்து அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு தலா 10, 000 ரூபாய் விதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வைகை ஆற்று கரையோர பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையாளர், நெல்பேட்டை பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை கண்காணிக்க 38 கேமராக்களும், வைகையாற்று கரையோர பகுதிகளில் குப்பை கொட்டும் பகுதிகள் கண்டறியப்பட்டு 100 AI தொழில்நுட்ப கேமராக்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.