கிருஷ்ணகிரி பிப் 5:
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்கள், கோரிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகளின் சார்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்து பி என் எஸ் எஸ் சட்டப்பிரிவு 163 குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 144 கீழ் மதுரை மாவட்டம் மாநகர் பகுதிக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்த அமைப்பினர் தெரிவித்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காவல்துறையினர் பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பாஜக பிரமுகர்களை வீட்டு காவலில் வைத்திருந்தனர். மேலும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் இந்து விரோத திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் முன்பாக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.கவியரசு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும், கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையை சேர்ந்தவர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முனவரிபேகம், கோவிந்தராஜ், கவுன்சிலர் சங்கர், கோவிந்தசாமி, ஸ்ரீராமுலு, வடிவேல், மண்டல தலைவர்கள் விமலா, பழனி, ரமேஷ், அன்பு, சுபா ராணி, கவிதா, புனிதா, நல்லசாமி, தீர்த்தம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.