விளாத்திகுளம், டிசம்பர் 05 –
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்கக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி ஆலய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், எச். ராஜா உட்பட 113 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராஜ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் செந்தில்குமார், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோட்டப்பொறுப்பாளர் இராமகாளியப்பன் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.



