நாகர்கோவில், ஜூன் 3:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ என்ற தன்னார்வ திட்டத்தை அறிமுகம் செய்து அது சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2025 – 26ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை அடைவதற்கான ஜூன் முதல் டிசம்பர் வரை உள்ள ஏழு மாதங்களுக்கான மாத வாரியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பொருட்டு ஆங்கில மொழியின் நான்கு அடிப்படை திறன்களை மாணவர்கள் எளிதாக அடையும் வகையில், பல்வேறு செயல்பாடுகள் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு ஜூன் மாதத்தின் நான்கு வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழி திறன் வளர் செயல்பாடுகள் தற்போது வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அதன் மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் அடுத்த மாதத்திற்கான மொழித்திறன் இலக்குகள் கொண்ட அட்டவணை வெளியிடப்படும். 2025 – 26ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் குறிப்பாக ஆறு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மேற்கொள்ளக்கூடிய மற்ற கற்றல் செயல்பாடுகளுடன் இணைந்து பள்ளி கல்வித்துறையால் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் அட்டவணைக்கேற்ப அடிப்படை ஆங்கில மொழி வளர் செயல்பாடுகளை ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்வதை ஊக்குவித்து அனைத்து மாணவர்களும் அடிப்படை மொழி திறன்களை பெற உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.