கிருஷ்ணகிரி, நவ. 17 –
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்ஐஆர் குளறுபடிகளை எதிர்த்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்க்கு அரசன் என்கின்ற வடிவேல் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி நகர செயலாளர் சசிகுமார் வரவேற்புரையாற்றினார். மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக அங்கு கூடியிருந்த அனைவரும் சமத்துவ கொள்கைக்கு ஆதரவாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் தமிழக வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் ஏராளமானோர் பறிக்காதே பறிக்காதே வாக்குரிமை பறிக்காதே, SIR-ஐ காட்டி ஓட்டை பறிக்காதே, பறிக்காதே பறிக்காதே எங்கள் ஜனநாயக உரிமையை பறிக்காதே, விடமாட்டோம் விடமாட்டோம் வாக்குரிமையை விடமாட்டோம், எளிமையாக்கு எளிமையாக்கு வாக்குரிமையை எளிமையாக்கு, நம்வாக்கு நம்உரிமை உள்ளிட்ட ஏராளமான வாசகங்கள் அடங்கிய பதாதகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், பேச்சாளர் நிஷா, மத்தூர் ஒன்றிய எழில்குமார், செய்தி தொடர்பாளர் நரேஷ்குமார், மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பெண்கள், இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் முகுந்தன் ஆர். பாண்டியன் நன்றி கூறினார்.



