கிருஷ்ணகிரி, நவம்பர் 18 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பர்கூர் மேற்கு ஒன்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் இ.சி. கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி: ஏழை குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு படிப்பை கொடுத்தது அதிமுக. அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்ததுடன், உயர்கல்வி பயில கல்லூரிகளை வழங்கி, அவர்கள் பணிக்கு செல்ல தொழிற்சாலைகளை கொண்டு வந்ததும் அதிமுக கட்சி தான். இதை கருணாநிதியோ, ஸ்டாலினோ செய்யவில்லை. தற்போது செலவுக்கு வாக்கு வங்கிக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். ஆனால் அதிமுக வாக்குகளை எதிர்பார்க்காமல் ஏழை குடும்ப குழந்தைகள் படித்து பொருளாதாரத்தில் முன்னேற திட்டம் கொடுத்தது. எடப்பாடி பழனிச்சாமி அரசு மருத்துவ கல்லூரியை வழங்கி உள்ளார் என பேசினார்.
மேலும் பீகாரில் வாரிசு அரசியல் இருந்தது, லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் தான் தொடர்ச்சியாக ஆட்சி செய்தார்கள். தற்போது மக்கள் துடைத்து எரிந்து விட்டார்கள். தமிழகத்தில் ஒரு குடும்பம் வாரிசு அரசியல் செய்து தமிழகத்தை கபலிகரம் செய்துகொண்டு இருக்கிறது. பீகாரில் வாரிசு அரசியலுக்கு எவ்வாறு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்களோ அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் குடும்ப அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்க வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
அண்ணா திமுக தொண்டர்களுக்கு கொள்கை தெரியாது என உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். 1972 ல் கருணாநிதி அண்ணாவின் கொள்கைகளை மறைத்த காரணத்தால் தான் எம்.ஜி.ஆர் அதிமுகவை தோற்றுவித்தார். இது உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் எழுதி கொடுத்ததை பார்த்து படிக்கிறார். இந்த குடும்ப கட்சியின் குடும்ப அரசியலை வேரோடும் வேரடி முன்னோடும் அழிக்க வேண்டும் என பேசினார்.



