மார்த்தாண்டம், நவ. 18 –
கேரளா மாநிலம் ஆரிய நாடு பகுதியைச் சேர்ந்தவர் விஜூ (46). எர்ணாகுளம் விஜூ என இவரை போலீசார் மத்தியில் புனை பேருடன் பேசப்படுகிறது. இவர் கேரளா மற்றும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். இவரை தமிழக மற்றும் கேரளா போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இவர் கடந்த 4ம் தேதி பளுகல் கண்ணுமாமூடு சாலையில் நடந்து சென்ற பெண்மணியிடம் ஐந்து பவுன் தாலி செயினை பறித்து சென்றார். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை அடுத்து தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதையடுத்து இந்த தாலிச் செயின் பறிப்பு சம்பவத்தில் பிரபல கொள்ளையன் ஆரிய நாடு விஜூ-க்கு தொடர்புள்ளது தெரிய வந்தது. விஜூ சென்ற ஒவ்வொரு இடங்களாக பின் தொடர்ந்த தனிப்பிரிவு போலீசார் நேற்று அவரை கேரளாவில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடமிருந்து 20 கிராம் தங்க நகையும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளா போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல கொள்ளையன் விஜூ-வை குமரி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



