நாகர்கோவில், அக். 23 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு முதல் மேயராக தேர்வு செய்யப்பட்ட மேயர் மகேஷ் தான் பொறுப்பேற்றுக் கொண்ட போது நாகர்கோவில் மாநகராட்சியை நம்பர் ஒன் மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே நம்பர் ஒன் மாநகராட்சியாக கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக செப்பனிடப்படாத சாலைகள் அனைத்தும் செப்பனிடப்பட்டு சாலை பணிகள் முழு விச்சில் நடைபெற்றது. ஆனாலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிலர் தெருக்களில் உள்ள சாலைகள் கற்கால மனிதர்கள் பயன்படுத்தி வந்த சாலையைப் போல குண்டும் குழியுமாக உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி 23 வது வார்டுக்கு உட்பட்ட செட்டிகுளம் கிருஷ்ணா மஹால் முன்பு உள்ள செட்டி தெருவுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது. இந்தச் செட்டி தெரு பகுதி மக்கள் எளிதில் செட்டிகுளம் பகுதிக்கு வருவதற்கும் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மருத்துவமனை போன்றவைகளுக்கு செல்வதற்கும் இந்த தெரு சாலையை பயன்படுத்துவது வழக்கம். அதேபோல் இந்த சாலையின் அருகாமையில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்புகளும் ஏராளம் உள்ளது.
ஆனால் இப்பகுதிக்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
அண்மையில் பெய்த மழையினால் இந்த சாலை குண்டுகளில் நீர் தேங்கி பொதுமக்களால் பயன்படுத்த முடியாத அளவில் சிதலம் அடைந்து காணப்படுகிறது. மாநகர் முழுவதும் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி வரி வசூல் செய்வதில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் இல்லை எனவும் தெரிவித்த பகுதி மக்கள் உடனடியாக ஆணையர் மற்றும் மேயர் இப்பகுதியை பார்வையிட்டு பல ஆண்டுகளாக செப்பனிடப்படாத இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேபோல் மாநகர் பகுதியில் உள்ள ஸ்காட் பள்ளி விளையாட்டு மைதானம் அருகாமையில் உள்ள தெரு சாலை, அண்மையில் போடப்பட்ட பெரும்பாலான தார் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை.



