கன்னியாகுமரி, டிச. 4 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கடல் நடுவில் அமைத்துள்ள பாறையில் சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அந்த பாறையில் அம்மனின் ஒற்றை கால் பாதம் இயற்கையாகவே பதிந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேல்சாந்தி மேளதாளத்துடன் அந்த பாறைக்கு சென்று கார்த்திகை மகாதீபம் ஏற்றுவது வழக்கம்.
நேற்று மாலை விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைக்கு கோயில் மேல்சாத்தி தனிப்படகில் சென்று ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மன் பாதத்திற்கு விஷேச பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோயில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாத மண்டபத்தின் மேற்கு பக் கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றினார். இங்கு ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபம் விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாறு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தை பார்த்து வணங்கி வழிபட்டனர்.



