நாகர்கோவில், டிச. 11 –
நாகர்கோவில் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு வாலிபர்கள் தனி படையினரால் கைது. தனிப்படையினருக்கு எஸ்பி ஸ்டாலின் பாராட்டு.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரு வாலிபர்கள் திருடி சென்றனர். வாகனத்தின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் அஜய் ராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் கிருஷ்ண பிரசாத், அமுதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் வாகனத்தை திருடிய வாலிபர்களை தேடிய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சபரி(25) மற்றும் நிகாஷ் நசீர் (25)ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் மீது தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை எஸ் பி பாராட்டினார்.



