நாகர்கோவில், டிச. 16 –
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று எக்ஸ்பிரஸ் வந்தது. ரயில் காலை மதுரையில் வந்த போது, ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பணியை தொடங்கினார்கள். அப்போது முன்பதிவு பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் இருக்கையின் கீழ் பேக் ஒன்று காணப்பட்டது.
இதையடுத்து அந்த பேகை திறந்து சோதனை செய்தபோது அதில் தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட புகையில மற்றும் குட்கா வகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரயில் நாகர்கோவில் வந்ததும் ரயில்வே போலீசிடம் ஒப்படைத்தனர். அவற்றில் மொத்தம் 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தன.
இவற்றை பெங்களூரில் இருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது கடத்திவரப்பட்டதா? அல்லது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தான் கொண்டு வந்தார்களா? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக தற்போது ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரம் கன்னியாகுமரிக்கு வந்த ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ், திப்ருகார் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 300 கிலோவுக்கு மேல் ரயில்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இதில் குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை.


