நாகர்கோவில், டிசம்பர் 13 –
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் 2026 ஆனது, 01-01-2026 -ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வழங்கப்பட்ட கணக்கீடு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, மின்னணுமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் இருப்பிடத்தில் வசிக்காதவர், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரு முறை இடம் பெற்றவர்கள், இறந்தவர்கள் இனங்கள் குறித்தும் 100 சதவீதம் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 401 நபர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
மேலும் 01-01-2026- ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி ஆகும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத வாக்காளர்கள், புதிதாக திருமணம் ஆகி இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நிலை – 2 கலந்து கொண்டனர். எனவே இம்முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் முகாம்களுக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


