கன்னியாகுமரி, ஜன. 9 –
குமரி மாவட்டம் மயிலாடி றிங்கல் தெளபே மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு தேவையான உபகரணங்களை பள்ளிக்கு செய்து தர வேண்டும் என பள்ளி தாளாளர் ஜெரோம் எமில் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கன்னியாகுமரி பாராளுமன்ற எம்பி விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம் பி தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உபகரணங்களை வழங்கினார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்து தாளாளர் ஜெரோம் எமில் தலைமை தாங்கினார். முன்னாள் பள்ளி தாளாளர் ஆல்வின் நாயகம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா வரவேற்றார்.
போதகர் ஜெஸ்லின் ஸ்டீபன் ஜெபித்து அர்ச்சித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கம் நடேசன், வக்கீல் சாம் சுரேஷ்குமார், மாவட்ட செயல் தலைவர் மயிலை மகாலிங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு துறை தலைவர் அருண் டிசாசோ, வட்டாரச் செயலாளர் ஜான்சன், சாரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



