கன்னியாகுமரி, டிச. 13 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு தங்கியிருந்த சுப்பையா மகன் சுந்தரகுமார் (39) கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கு விஜய தயாளினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்தனர்.
தற்போது தயாளினிக்கு குழந்தை உண்டாகி இருந்ததாக மருத்துவ பரிசோதனையில் தெரிந்தது. இதனால் மிக மகிழ்ச்சியடைந்த ஏழு நாட்களில் அந்த குழந்தையின் கரு கலைந்து விட்டது என கூறப்படுகிறது. இதனால் சுந்தரகுமார் அவரது மனைவியிடம் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த விஜய தயாளினி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காததால் சுந்தரகுமார் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.


