கன்னியாகுமரி, ஜன. 12 –
இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சஜாக்’ ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.
தமிழ்நாடு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம். நாகை,நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 13 கடலோர மாவட்டங்களில் இந்திய கப்பல் படை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்திய கடலோர காவல் படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து கடல் பகுதியில் சஜாக் ஆப்ரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தவிர இந்திய கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை, குமரி மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் அதிநவீன ரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் படகு மூலம் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 106 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை கிராமங்களில் வாகனங்களில் கண்காணிப்பு ரோந்து சென்று போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் வாகன சோதனையும் நடத்தினர்.
கடலோர பகுதிகளில் போலீசார் படகுகள் மூலம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் மீனவ கிராமங்களில் ஊடுருவலில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து போலீசாருக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும் என்று ஏச்சரிக்கை விடுத்துள்ளனர்.



