நாகர்கோவில், டிசம்பர் 31 –
தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் அறிமுக பொதுகூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அந்த தொகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் வேட்பாளர் அறிமுகக் பொது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 28-12-2025 அன்று மாலை புதுக்கடையில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஹிம்லர் பேசுகையில்: குமரி மாவட்டத்தின் இதயமாக இருக்கக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைகளை வெட்டி கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக தான் நம்முடைய முன்னோர்கள் ரத்தம் சிந்தினார்களா? அவர்கள் மீட்டெடுத்த நம்முடைய மாவட்டத்தை பின் வரும் சந்ததியினர், தலைமுறைகள் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வைத்து சென்றார்கள். ஆனால் நம்முடைய மாவட்டத்தில் ஒரு அமைச்சர், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் ஒரு லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் இதற்கு உங்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; டாரஸ் லாரிகள் தினமும் அணிவகுத்து செல்கின்றன; பல உயிர்கள் பலியாகி உள்ளன. நாம் தமிழர் கட்சி எந்த அதிகாரத்தில் இல்லாதபோதும் கனிம வள லாரிகளை சிறை பிடித்தோம்; பல போராட்டங்களை மக்களுக்காக நடத்தினோம்; மாவட்டத்தின் அமைச்சர் சொல்கிறார் மாநிலம் விட்டு மாநிலம் கனிமங்கள் கொண்டு செல்ல மத்திய அரசின் சட்டம் உள்ளது என்று; நான் கேட்கிறேன் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்த சட்டம் பொருந்தும் என்றால் அது கேரளாவுக்கு மட்டும் பொருந்தாது ஏன்? அந்த சட்டத்தை பயன்படுத்தி கேரளாவில் இருந்து ஒரு மண்ணை எடுத்து குமரி மாவட்டத்தில் தட்ட முடியுமா? இறைச்சி, மீன் மற்றும் மருத்துவ கழிவுகளை நம்முடைய மாவட்டத்தில் கொட்டுகின்றனர் நம்முடைய மாவட்டம் குப்பை தொட்டியா? உங்கள் வீட்டின் அருகில் யாராவது குப்பைகளை தட்டி சென்றால் சும்ம விடுவீர்களா? ஆனால் ஒரு மாநிலம் அங்கு உள்ள குப்பைகளை இங்கே கொண்டு தட்டி செல்கிறது. என்றைக்காவது ஒரு சட்டமன்ற உறுப்பினராவது நெய்யாறு இடது கரை கால்வாய் பற்றி பேசுகிறார்களா? எதற்காக அவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.
மீனவர்களின் குரல்:-
கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை இது வரை நிறைவேற்றவில்லை; ஓகி புயல் வந்த போது மீனவர்கள் தங்கள் உறவினர்களை காணவில்லை என தவித்தார்கள் கதறினார்கள். அவர்கள் கதறல் சத்தம் இன்றும் என் காதுகளில் கேட்கிறது. இன்று வரை அவர்களின் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்றவில்லை. கேட்டால் மத்திய அரசு அனுமதி தரவில்லை என்று சொல்ல்கிறார்கள். 2014 வரை மத்தியில் காங்கிரஸ் கட்சி தானே ஆட்சி செய்தது. அப்போது ஏன் கொண்டு வரவில்லை? என பல கேள்விகளை அடுக்கடுக்காக மக்கள் முன் வைத்தார். தொடர்ந்து பேசிய அவர் மீனவர் கடலில் காணாமல் போனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க ஏழு ஆண்டுகள் வரை ஆகிறது. 2023 ஆம் ஆண்டு நடந்த மீனவர் தினத்தில் வாக்குறுதி அளித்த உதயநிதி ஸ்டாலின் ஏதாவது நிறைவேற்றி உள்ளாரா? சாலையில் விபத்து ஏற்படும் போது ஆம்புலன்ஸ் வருகிறது. கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்றி தரவில்லை.
கிள்ளியூர் தொகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் பிரச்சினைகள் இருக்கிறது
பால பள்ளத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறுவர் பூங்கா அமைப்பதாகக் கூறி மக்களிடம் கையெழுத்து வாங்கி உள்ளார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் நாங்கள் சென்று அதை தடுத்து நிறுத்தினோம்.
“மக்களுக்காக தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை. உங்களோடு நான் இருப்பேன். நான் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. குமரி தந்தை நேசமணி வழியில் நான் இந்த தொகுதியில் வென்று நேசமணி மற்றும் அவரோடு போராடிய தலைவர்களின் கனவை நிறைவேற்றுவேன் என உறுதியளித்து எனக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என அவர் பேசினார். இந்த பொது கூட்டத்தில் செந்தமிழர் பாசறை வளைகுடா செயலாளர் இரவிவர்மன், இலைகள் இலக்கிய அமைப்பு பாலசுப்ரமணியம், நாம் தமிழர் கட்சி ஐக்கிய நாடுகள் சபை செய்தித் தொடர்பாளர் ஜீவா டானிங், தமிழன்னை தமிழ்ச்சங்கம் நிறுவனத் தலைவர் கருங்கல் கண்ணன்,கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிஃபர், குளச்சல் சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் ஆன்சி சோபா ராணி, விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் மரிய ஸ்டெல்லா, நாகர்கோயில் சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் முத்துக்குமார், பத்மநாபபுரம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் சீலன் உட்பட அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



