நாகர்கோவில், நவம்பர் 19 –
குமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இன்றி பைக் ஓட்டுபவர்கள், மற்றும் செல்போன் டிரைவிங், பைக் ரேஸ் உள்ளிட்ட விதிமுறை மீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாகனங்களில் விதிமுறைகளுக்கு உட்படாத எல்.இ.டி. விளக்குகளை பொருத்தி இருப்பதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூச்சம் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ்கிறது. எனவே இது போன்ற வாகனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்தன.
இந்த புகாரின் பேரில் கார் உள்ளிட்ட வாகனங்களில் விதிமுறைக்கு மாறாக அதிக திறன் கொண்ட எல்இடி விளக்குகள் இருந்தால் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பெயரில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் இது தொடர்பாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வடசேரி, பார்வதிபுரம் பகுதிகளில் டிராபிக் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 6 கார்களில் விதிமுறைக்கு மாறாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதை அடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கார் டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் இத்தகைய வண்ண எல்இடி விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர். இதேபோல் வடசேரி பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற மினி பஸ்ஸில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பி இருந்தனர். அந்த வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.


