நாகர்கோவில், நவ. 14 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து குழந்தைகளுக்கான நடைபயண பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா துவக்கி வைத்தார்.
பேரணியில் பொறியியல் கல்லூரி, அரசு ஆயுர்வேத கல்லூரி, செவிலியர் கல்லூரி, கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ”ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு உரிமையும்” என்ற கையெழுத்து பிரச்சாரத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
நடைபெற்ற பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயமீனா, தொழிலாளர் உதவி ஆணையர் ராஜகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா தேவி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



